Saturday, June 13, 2009

[புத்தக மதிப்புரை] சாய்வு நாற்காலி - தோப்பில் முகமது மீரான்

1997ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற தோப்பில் முஹமது மீரானின் ‘சாய்வு நாற்காலி’ தரும் வாசிப்பனுபவம் அலாதியானது. ஒரு கதை என்ற உணர்வை தாண்டி சீரழிக்கப்பட்ட சவ்தா மன்ஸில் என்ற வீட்டில் நாமும் ஓர் அங்கமாகி, சம்பவங்களை நேரில் பார்க்கும்படியான மொழி நடை ஆளுமை மிகவும் அருமை! கன்னியாகுமரி அருகில் தென்பத்தன் என்ற ஒரு அழகிய கடலோர கிராமத்தை உருவாக்கி அதில் சில பல மாந்தர்களை உலாவ விட்டுருகிறார் தோப்பில். ஒரு படகை கடலில் செலுத்தும் லாவகத்துடன் நம்மை அந்த கிராமத்துக்குள் அழைத்து செல்லும் ஆசிரியர், புயல், மழை, கத்திரி வெயில் என அனைத்தயும் நமக்கு காட்டி மறுபடியும் வந்து கரையில் விடும்பொழுது அந்த போதை தெளிவது அத்துணை சுலபமல்ல.

மருமக்கள் தாய மரபுரிமையி்ல் நாடாளும் திருவிதாங்கூர் மார்த்தாண்டவர்மா மகாராஜாவின் கையாளாகவும் அவரின் மதிப்பை பெற்றவருமான பவுரீன் பிள்ளக்காவின் வம்சாவழியில் பிறந்தவர் முஸ்தபாக்கண்ணு. மகாராஜாவுக்கு எதிராக மக்கள் வழி மரபுவுரிமைக்காகப் போராடும் எட்டு வீட்டுப் பிள்ளைமார், மாதம்பிகள், பண்டாரங்களை கொன்று தீர்த்து அவர்களின் வீட்டில் உள்ள அரிய சந்தன அலமாரி, பட்டு உறுமால், வெள்ளித்தட்டு, பப்புவர்மனின் வாள், சன்னலின் விஜாவரிகள் ஆகியவற்றை மஹராஜாவின் பரிசாக பெறுகிறார். அந்த வம்சத்தின் கடைசி கண்ணி பல வகை பண்டங்களையும் பெண்களையும் ருசி பார்ப்பதற்காக அனைத்தையும் விற்று கடைசியில் எஞ்சி இருப்பது அந்த சாய்வு நாற்காலியும் குடும்பத்துக்கு வாழ வந்து பெண்களின் உயிரை குடிக்கும் அதபு (ஒழுக்கம்) பிரம்பும் தான்.


முஸ்தபா கண்ணின் ஆசைகளும், கிணற்றில் விழுந்த பல கன்னிமார்களின் சாபமும் சவ்தா மன்ஸிலின் கற்பை எப்படி சூரையாடுகிறது என்பதையும், அதனுள்ளாகவே அந்த கால கட்டத்தில் இருந்த அரசியலையும் அவ்வீட்டில் உள்ள அந்த சாய்வு நாற்காலியில் நம்மையும் சாய்ந்தமர செய்தே அழகாக தெரிவிக்கிறார் தோப்பில் என்னும் அருமையான கதை சொல்லி.


பொன்னாரைஞானம் வாங்கி தராமல் புக்ககத்து வாசலை மிதிக்க மாட்டேன் என சவ்தா மன்ஸிலிலேயே வாழும் முஸ்தபாக்கண்ணின் சகோதரி ஆசியாவும்மாள், அவள் கணவன் செய்தஹமது, தமக்கு சாவு வேண்டும் என்பதையே வேண்டுதலாய் வைத்து துஆ செய்யும், கணவரின் குடும்பத்திற்காக உழைத்து இளைத்து கடைசில் நோயாளி ஆனா பிறகு அனாதையாய், சக்கையாய் கிடக்கும் முஸ்தபாக்கண்ணின் மனைவி மரியம் பீவி, பெற்றவரின் பழக்கங்கள் பிடிக்காமல் ஊரை விட்டே போன மகன் ஷாகுல் ஹமீது, முஸ்தபாக்கண்ணின் வயிற்றை நிரப்புவதற்கும் அவரின் அடுத்த தார ஆசையை தீர்பபதாக சொல்லியும் அவரிடம் காசு பறிக்கும் இஸ்மாயில் என தனித்தனி ரகமாக காணப்படும் இவர்களை இணைப்பது சவ்தா மன்ஸில் எனும் நெடிந்துயர்ந்த கட்டிடம்.


இவர்களுடன் தங்ங்கள்கள், அவுலியாக்கள், ஒலி, பலாய் முசிபத், ஜின்னு என பல நல்ல/கெட்ட சக்திகளும் வாழ்கிறார்கள். சிலர் பணக்காரகளின் கையாளாகவும்.. ஏழையும் விவரமில்லாதவர்களுமான மக்களின் வீட்டு பெண்களை சீரழித்த பிறகு அவர்களை ஒழித்துக்கட்ட அந்த பணக்கார மக்கள் உபயோகிக்கும் கருவிகள் இவர்களே.


கதை நேர் கோட்டில் பயணிக்காமல் வெவ்வேறு காலகட்டங்களுக்கு நம்மை அழைத்து சென்றாலும் நம்மால் அதனுடன் சிரமமின்றி ஒன்றி போக முடிகிறது. குமரி முகமதியரின் வட்டார வழக்கான தமிழும் மலையாளமும் அராபிய சொற்களும் கலந்த பேச்சு நம்மை புது உலகிற்கு அழைத்து செல்கின்றது. நமக்கு புரியாத சில வார்த்தைகளுக்கு அர்த்தமும் கொடுக்கப்பட்டிருந்தாலும் அந்த கிராமத்தில் நாமும் வாழ தொடங்கியப்பின் நமக்கு அவை தேவையாய் இல்லை.


ஒரு மாளிகை எழுந்த, அழிந்த வரலாற்றை மிக அழகான மொழி நடையுடன் சொல்லும் ‘சாய்வு நாற்காலி’ சமீபத்தில் படித்தவற்றுள் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று!


படிக்க ரசிக்க:சாய்வு நாற்காலி - தோப்பில் முகமது மீரான் – ரூ. 175 – காலச்சுவடு பதிப்பகம்

No comments: