Wednesday, February 4, 2009

[புத்தக மதிப்புரை] மின்சார பூ & கிறுகிறுவானம்

மின்சார பூ

கிராமங்களுக்கு பல முகங்கள் இருக்கின்றன. சில பொழுதுகளில் அவை மந்தகாசமான மணத்துடனும் மற்றும் பல நாட்களில் பாலையின் தகிப்பு அங்குள்ள செடி கொடி முதல் மக்கள் மனங்கள் வரை நிறைந்திருக்கும் வண்ணமும் அமையப்பெற்றிருக்கும்!
சிற்றூர்களில் வசிக்கும் மனிதர்களையும் அவர்களது இயல்புகளையும் இயல்பான நடையில் வாசகர்களை சென்றடையும் வகையில் எழுதுபவர்களில் முக்கியமானவர் மேலாண்மை பொன்னுசாமி! அவரின் கதைகளை படிக்கையில் அந்த கந்தக பூமியின் வெப்பத்தையும் கள்ளமில்லா மனிதர்களின் சுபாவத்தையும், மிருக மனம் கொண்டோரின் நிதர்சனங்களையும் அருகில் இருந்து பார்த்தது போன்ற உணர்வே எஞ்சி நிற்கும்!
சாகித்ய அகாடமி விருது பெற்ற மின்சார பூ என்ற தொகுப்பு பல சிறுகதைகளை உள்ளடக்கியது! இவரின் கதை மாந்தர்கள் சமூகத்தாலும் சடங்குகளாலும் கீழ் நிலையில் வைக்கப்பட்டோர்! வருடத்திற்கொரு முறை பொங்கல் பண்டிகையின்போது மட்டுமே சுடு சோறு சாப்பிடகூடிய நிலையில் உள்ளவர்கள்! காலத்தின் கட்டாயத்தாலும் வயிற்றின் தேவைகளுக்காகவும் பல கட்டங்களையும் கண்டங்களையும் தாண்டி வருபவர்கள்! அவற்றில் சிலர் காலத்தை வென்று நிற்கும்படியும் மற்றோர் அதன் சூழலில் மாட்டிக் கொள்பவர்களாகவும் பல்வேறு குணாதிசயங்களுடன் நம்மிடையே வலம் வருகின்றனர்!
மின்சார பூ என்ற சற்றே பெரிய சிறுகதை பல உணர்ச்சிகளின் கலவையாக அமைந்துள்ளது! உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி சிறுவர்களிடையே வேர் விடும் ஆழமான அன்பு, எளியோரை வலியோர் நடத்தும் விதம், சிறுவர்களின் மனதில் சிறுவயதிலையே விழும் அவமான காயம், குற்றவுணர்ச்சி ஆகிய பலவற்றையும் அருமையான விதத்தில் மனதை சுடும் முடிவுடன் எழுதியுள்ளார்!



கிறுகிறுவானம்


தட்டாமாலை சுற்றி நிற்க முடியாமல் அப்படியே மயங்கி கிறங்கி மண்ணில் சரிகையில் நம் கண் முன்னே விரியும் எல்லா காட்சிகளையும் ஒழுங்குபடுத்தி கூற முடியுமா? அது போல தான் சிறுவர்களின் மனதில் தோன்றும் எண்ணங்களும்! ஒரு பொருளை வளர்ந்தவர்கள் பார்ப்பதற்கும் சிறுவர்களின் பார்வைக்கும் பல வித்தியாசங்கள் உள்ளன! குழந்தை பேச தொடங்குகையில் அதன் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தைக்கும் காத்திருந்து அகம் மகிழும் நம்மில் பலரும் அவர்கள் பேச தொடங்கியபின் சொல்லும் பல விஷயங்களை காது கொடுத்தே கேட்பது இல்லை! எனவே அவர்கள் கண்ணில் படும் எல்லா பொருள்களுடனும் சிநேகம் கொண்டு பேச தொடங்குகிறார்கள்!
S.ராமகிருஷ்ணனின் கிறுகிறுவானம் என்ற கதை ஒரு சிறுவன் பேசுவது போன்ற நடையில் எழுதபட்டிருக்கிறது! அவனுக்கு விருப்பமான விஷயங்களை பற்றியும், அவன் பார்வையில் இருள், மேகம் போன்ற பொதுவான விஷயங்களை பற்றியும் படிப்பது ஒரு வித்தியாசமான அனுபவம்! இந்த கதையை படிக்கையில் சுஜாதாவின் பூக்குட்டி என்ற கதை நினைவில் தோன்றி மறைந்தது! ஒரு பணக்கார சிறுமிக்கு (விம்மு), சேரியில் வசிக்கும் ஒரு வறுமையில் வாடும் குடும்பத்தின் சிறுமியுடனும் (வேலாயி) அவளின் நாயிடமும்(பூக்குட்டி) ஏற்படும் பிரியமும் அது மறுக்கப்படும்போது அவளிடம் உடல் ரீதியாகவும் மனதிலும் ஏற்படும் குறைபாடுகளை மிக அருமையாக சொல்லி இருப்பார்!
சமூகத்தின் தவறான படிப்பினைகளும், சட்ட திட்டங்களும் சற்றும் பாதிக்காதது சிறுவர் சிறுமியரை தான்! நாம் போடும் சாதி மத, ஏழை பணக்கார கட்டுகள் சிறுவர்களை என்றுமே நெருங்க முடியாது! கள்ளத்தனம் இல்லாத அந்த பருவம் இன்னும் சில நாள் இருந்திருக்க கூடாதா என தோன்றும் எண்ணத்தை தவிர்க்க இயலவில்லை!

எஸ்.ராவின் வலைத்தளம்: http://sramakrishnan.com/

படிக்க ரசிக்க:
மின்சார பூ - மேலாண்மை பொன்னுசாமி – ரூ. 70 – கங்கா பதிப்பகம்
கிறுகிறுவானம் – எஸ். ராமகிருஷ்ணன் – ரூ. 25 – பாரதி புத்தகாலயம்

3 comments:

Anonymous said...

Great review! Feel like grabbing a copy and reading "kiru kiru vanam"

சரவண வடிவேல்.வே said...

இரண்டு புத்தகங்களுமே எனக்கு பரிச்சயம் இல்லாத புத்தகங்கள். உங்கள் பதிவு இந்த புத்தகங்களை படிக்க தூண்டுகிறது.

Nandhini said...

@Pavi Sis

Thanks a lot da!
Come home and take the book! Anytime!! ;)


@Saravana Vadivel

Kandippaaga padiyungal Saravana!!
Ungaluku pidikkum!!
Thanks a lot for visitin!! :)