Tuesday, May 19, 2009

சமுத்திர குமாரி

இரவு நடுநிசியில் நான் வீட்டிலிருந்து எழுந்து செல்வேன்.. என்னைப் பின்தொடர்ந்து வந்தால் என் காதலர்களை* உமக்கு காட்டுவேன்.. நீரே பார்த்து தெரிந்து கொள்ளும்… **

பகல் பொழுதில் பிரம்மாண்டமாய் பரந்து விரிந்திருக்கும் கடலை விட இரவின் ஆட்சியில் துயில் கொள்ளும் கடல் மிகுந்த மனக்கிளர்ச்சியை ஏற்படுத்தக்கூடியது! கூட்டுக்கு செல்லும் பறவையை போல விரைந்து செல்லாமல் பள்ளி செல்லும் குழந்தை போல மெல்லிய சிணுங்கல்களுடன் சூரியன் அசைந்து செல்லும் அழகையும் குழந்தைகளின் வருகையை எதிர்பார்த்து, கண்டதும் இரு கரம் நீட்டி தழுவிட துடிக்கும் அன்னையை போல் தோற்றம் காட்டும் கடல் அன்னையையும் காண உடம்பெல்லாம் கண்களாக பெற்றிந்தாலும் போதாது!

சிறு வயதில் குடும்பத்துடன் கடல் பார்க்க செல்வதே ஒரு சுகானுபவம்! கடலுக்கு அந்த பக்கம் என்னமா இருக்கு? என்ற கேள்விக்கு அம்மா சொன்ன ‘ஸ்ரீலங்கா இருக்கு மா’ என்ற பதில் என்னை மிகவும் உவகை கொள்ள செய்த பதில்களுள் ஒன்று (’வீட்டுக்கு போகும்போது ஐஸ்க்ரீம் வாங்கி தரேன்’ மட்டொன்று) !!) அலைகள் காலை தழுவும்படி நின்று அந்த பக்கம் இலங்கை மக்கள் எவரும் தென்படுகின்றனரா என்று பார்ப்பது எனக்கு மிகவும் பிரியமான பொழுதுபோக்கு! தந்தையிடம் ஒரு நாள் பயணமாக லங்கா செல்லலாமா என கேட்டபோது ஏன் எல்லாரும் இப்டி மடத்தனமா சிரிக்கறாங்க என்று மிகுந்த கோவம் வந்தது! வளர்ந்த பின்பும் ‘அந்த பக்கம் ஸ்ரீலங்கா இருக்கு.. ரொம்ப பக்கம் தான்’ என்ற எண்ணத்தை என்னால் மாற்றி கொள்ள முடியவில்லை!

என் காதலர்களை காட்டுவேன் என்றா சொன்னேன்? மன்னிக்கவும்! காது எனும் கருவியை மட்டும் உபயோகித்தால் போதும். அவர்களில் இருப்பை நீங்கள் உணரலாம்..

கடல் பார்த்தலை விட அருமையானது எது தெரியுமா? கடல் ஓசை கேட்டள்! வீட்டு மொட்டை மாடியில் நடந்தபடி சற்று தொலைவில் ஒலிக்கும் கடலோசயுடன் அளவளாவும் சுகத்தை என்னென்று சொல்வது? கடல் தன்னுடைய அலை ஓசையின் வாயிலாக தினந்தோறும் நம்முடன் பல நூறு கதைகள் பேசிக்கொண்டு தான் இருக்கிறது! கடலே பல அலை குழந்தைகளாக பிரிந்து யார் முதலில் கரையை தொடுவது என போட்டியிட்டு இறுதியில் கரையை தொடும் முதல் அலைக்கு ஏனைய அனைத்தும் கொடுக்கும் ஆரவார உற்சாகம் தானோ அலையோசை.. வென்ற அலையை விட பின் தங்கிய அலைகளின் கூச்சல் அதிகம் இருப்பது அந்த உற்சாகாப்படுத்துதலினால் கிடைக்கும் மன நிறைவினால் தானோ? யாமறியோம் பராபரமே!! மழை நாட்களில் பொங்கி வரும் அலை ஓசையை கேட்கும் வாய்ப்பு என்றாவது கிடைத்திருக்கிறதா? மழை தோழிக்கு காதல் கொடுக்கும் அற்புதமான வரவேற்பு முறசொலி அன்றோ அது!!

அடடா.. நேரமாகிவிட்டது.. சென்று வருகிறேன் என் அன்பர்களே..

ஆம்!! நான் பூங்குழலி அல்லவேl! எம் தந்தையும் தியாகவிடங்க கரையர் அல்லர்l! என் இஷ்டம் போல் நள்ளிரவில் சமுத்திரத்தை ஆள்வதற்கும் என் காதலர்களை சந்திப்பதற்கும்!!

மீண்டும் சந்திப்போம்..

*Will-o’-the-wisp
** பொன்னியின் செல்வனில் இருந்து..